

பெங்களூரு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒடிசாவுக்கான செயலாளர் பொறுப்பை வகிக்கும் ஜெட்டி குசம் குமார், பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றும் எம்.எல்.ஏ.க்களை வளைக்க முயற்சிக்கிறது என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை இன்று கூறியுள்ளார்.
இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறும்போது, பா.ஜ.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் ஒருவருடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவர் எங்களுடைய கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.5 கோடிக்கான வெற்று காசோலையை கொடுத்து அவர்கள் பக்கம் இழுக்க முயன்றார். அவரை பிடித்து விட்டோம்.
அவருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மஜ்ஜி மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஒருவருக்கு எதிராகவும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
ஒடிசாவில் பா.ஜ.க. வேட்பாளர் திலிப் ராய் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் என்றும் குற்றச்சாட்டு கூறினார். எங்களுடைய எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து, ஒரு பொதுவான நோக்குடன் போராடி வருகிறோம். இதனால், பா.ஜ.க.வின் சதித்திட்டம் தோல்வியடையும். பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரசின் பொது வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.
இதேபோன்று, காங்கிரஸ் எம்.பி. சப்தகிரி உலாகா கூறும்போது, ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூ.5 கோடி கொடுப்பதற்காக 4 பேர் அணுகினர். பெங்களூருவில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது என்றார்.