

புதுடெல்லி,
மேற்கு ஆசியா முழுவதும் போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியளவு சீர்குலைந்துள்ளதாலும், சமீபத்திய பத்தாண்டுகளில் இல்லாத மிக மோசமான எரிசக்தி நெருக்கடிகளில் ஒன்றை உலகம் எதிர்கொண்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலரிலிருந்து கிட்டத்தட்ட 126 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் உலக நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. அரசாங்கங்கள் அவசரகாலக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன, மேலும் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரலாறு காணாத விலையை செலுத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும், இந்தியா எரிபொருள் விலைகளை பெரும்பாலும் நிலையாக வைத்திருக்க முடிந்துள்ளது.
இதுதொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணைச்செயலாளர் சுஜாதா சர்மா நேற்று நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-
அதிகரித்து வரும் உலகளாவிய விலையால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் ரூ.7 ஆயிரத்தில் இருந்து சுமார் ரூ.11,500 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் எல்.பி.ஜி. விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இழப்புகளை சந்தித்த போதிலும், கலால் வரியைக் குறைத்தல், எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரித்தல், பி.என்.ஜி. இணைப்புகளை ஊக்குவித்தல் மற்றும் நிலையான எரிவாயு வினியோகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் நுகர்வோரை பாதுகாக்க இந்திய அரசு செயல்படுகிறது.
ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட ரூ.200 ஆக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.95 ஆக உள்ளது. (டெல்லி விலை). நாட்டில் எந்தவொரு வினியோகஸ்தருக்கும் பற்றாக்குறை ஏற்படாத வகையில், தடையற்ற எல்.பி.ஜி. வினியோகத்தை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.