பாகிஸ்தான் ராணுவத்தில் எத்தனை பேர் பலி? நிருபரின் கேள்விக்கு அதிரடி பதிலளித்த ராஜீவ் காய்

பாகிஸ்தான் வான்வழி ஊடுருவல்கள் மற்றும் வான்வழி தாக்குதல்களை தொடுத்ததும், நாம் பெரிய ஆயுதங்களை பயன்படுத்தினோம் என்றார்.
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறி வைத்து, இந்தியா கடந்த 6-ந்தேதி அதிகாலையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவானது.
உடனடியாக, அந்நாட்டில் இருந்து இந்தியாவின் ராணுவ உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனினும், அவற்றை இந்திய ஆயுத படைகள் முறியடித்து வெற்றி கண்டன. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது.
இதனை குறிப்பிட்டு, பாகிஸ்தான் ராணுவத்தில் எத்தனை பேர் பலியானார்கள்? என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டி.ஜி.எம்.ஒ. லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 35 முதல் 40 பேர் என முன்பே குறிப்பிட்டேன்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதும், இந்திய ராணுவம் மீது அல்லது இந்திய ஆயுத படைகளின் உட்கட்டமைப்பு மீது பாகிஸ்தான் ராணுவத்தின் பதிலடியும் இருந்தது.
எங்களுடைய இலக்குகள் பயங்கரவாதம் சார்ந்த விசயங்களுக்கு எதிராக இருந்தது. இதன்பின்பு, நம்முடைய உட்கட்டமைப்பு மீது அவர்கள் வான்வழி ஊடுருவல்கள் மற்றும் வான்வழி தாக்குதல்களை தொடுத்ததும், நாம் பெரிய ஆயுதங்களை பயன்படுத்தினோம். அவர்கள் தரப்பில் இழப்பு ஏற்பட்டு இருக்கும். அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
எத்தனை உயிரிழப்புகள்? எத்தனை பேர் காயமடைந்தனர்? எங்களுடைய இலக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இல்லை. ஆனால், அது நடந்திருக்கும். அந்த எண்ணிக்கையை எண்ண வேண்டியது அவர்களுடைய விசயம். எங்களுடைய வேலை இலக்கை தாக்குவது. உடல்களை எண்ணுவதில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.






