10 ஆண்டுகளாக படுக்கையில் முடங்கிய நிலையிலும், பல உயிர்களைக் காத்து வரும் ஐதராபாத் பெண்

”மன உறுதியே அனைத்திற்கும் முக்கியம்" என்று லட்சுமி நரசம்மா தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளாக படுக்கையில் முடங்கிய நிலையிலும், பல உயிர்களைக் காத்து வரும் ஐதராபாத் பெண்மணி.
லட்சுமி நரசம்மா
Published on

ஐதராபாத்,

ஐதராபாத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் படுக்கையிலேயே முடங்கியிருக்கும் 55 வயது லட்சுமி நரசம்மா, தற்கொலை தடுப்பு உதவி மையம் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார்.

முடக்கிய நோய் – மீண்டெழுந்த உத்வேகம்

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஐதராபாத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நரசம்மா (வயது 55). அவருக்கு, அவரது 20 வயதிலேயே முடக்கு வாதம் என்ற கடுமையான நோய் பாதிப்பு ஏற்பட்டது. காலப்போக்கில் இந்நோய் தீவிரமடைந்ததால், கடந்த 10 ஆண்டுகளாக அவர் முற்றிலும் நடக்க முடியாமல் படுக்கையிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார். உடல் ரீதியான வேதனையாலும், குடும்பத்தின் கடுமையான நிதி நெருக்கடியாலும் அவரே ஒரு கட்டத்தில் தீவிர மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளார்.

300-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காத்த சேவை

இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு தனது அண்டை வீட்டாரின் வழிகாட்டுதலின்படி, ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் ‘ஒன் லைப்’ (1Life) என்ற தற்கொலை தடுப்பு உதவி மையத்தில் தொலைபேசி ஆலோசகராக லட்சுமி இணைந்தார். தீவிர மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் இந்த உதவி மையத்தை அழைப்பவர்களின் வலிகளை, லட்சுமி தனது படுக்கையிலிருந்தவாறே தொலைபேசி மூலம் பொறுமையாகக் கேட்டு அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதுவரை 300-க்கும் மேற்பட்டோரின் தற்கொலை எண்ணங்களை மாற்றி, அவர்களை நல்வழிப்படுத்தியுள்ளார்.

சொந்த வலியை மறந்த உன்னதம்

இதுகுறித்து லட்சுமி நரசம்மா கூறுகையில், "உதவி மையத்திற்கு வருபவர்களின் கடுமையான துயரங்களையும், வாழ்வாதாரப் போராட்டங்களையும் கேட்கும்போது, எனது சொந்த பிரச்சனைகள் மிகவும் சிறியதாக தோன்றுகின்றன. மக்கள் தங்கள் பிரச்சனைகளைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மன உறுதியே அனைத்திற்கும் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

சேவைக்கு ஆதரவு - பாராட்டுகள்

படுக்கையிலிருந்தபடியே பிறரது வாழ்வில் நம்பிக்கையை விதைத்து வரும் லட்சுமி நரசம்மாவின் இந்த உன்னத சேவைக்கு, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் முழு ஆதரவாக இருந்து வருகின்றனர். உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று (வியாழக்கிழமை), அவரது இந்த நெகிழ்ச்சியான சேவை பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com