'நான் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரி.. நீங்கள் யார்?' - டெல்லி துணை நிலை கவர்னருக்கு கெஜ்ரிவால் சரமாரி கேள்வி

டெல்லி துணை நிலை கவர்னருக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
Image Courtesy : @AamAadmiParty twitter
Image Courtesy : @AamAadmiParty twitter
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டிற்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கும் திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா மறுப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக வி.கே.சக்சேனா அளித்த விளக்கத்தில், செலவினங்களை குறைப்பதற்கான வழிவகைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும், ஆசிரியர்களுக்கு இந்தியாவிலேயே பயிற்சி வழக்குவது குறித்து டெல்லி அரசு திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் டெல்லி துணை நிலை கவர்னருக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று டெல்லி சட்டசபையில் இது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா மீது டெல்லி முதல்-மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார்.

சட்டசபை விவாதத்தின்போது அரவிந்த கெஜ்ரிவால் பேசியதாவது;-

"யார் இந்த துணை நிலை கவர்னர்? நம் குழந்தைகள் எப்படி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அவர் யார்? எங்களைத் தடுக்க துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் இல்லை.

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. நாளை நாம் நமது துணை நிலை கவர்னருடன் இணைந்து மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வரலாம். எங்கள் அரசு மக்களை துன்புறுத்தாது.

இந்த துணை நிலை கவர்னர் என் பணிகளை சரிபார்ப்பது, எழுத்துப்பிழைகள், கையெழுத்து பற்றி புகார் செய்வது போல எனது ஆசிரியர்கள் கூட என்னுடைய வீட்டுப்பாடத்தை சரிபார்த்தில்லை. அவர் என் தலைமை ஆசிரியர் இல்லை.

நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரி. பொதுமக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தனர். நான் அவரிடம் (துணை நிலை கவர்னரிடம்), 'செலவு-பயன் பகுப்பாய்வு குறித்து கேட்க நீங்கள் யார்?' என்று கேட்டேன். அவர் 'ஜனாதிபதி என்னைத் தேர்ந்தெடுத்தார்' என்றார். அதற்கு நான், 'ஆங்கிலேயர்கள் வைஸ்ராய்களை தேர்ந்தெடுத்தது போலவா?' என்றேன்.

வைஸ்ராய்கள், 'இந்தியர்களே, உங்களுக்கு ஆட்சி செய்யத் தெரியாது' என்று கூறுவார்கள். இப்போது நீங்கள் (துணை நிலை கவர்னர்) எங்களிடம், 'டெல்லி வாசிகளே, உங்களுக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை' என்று சொல்கிறீர்கள்."

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

மேலும் துணை நிலை கவர்னரின் அதிகார வரம்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை கெஜ்ரிவால் சுட்டிக்காட்டினார். அதோடு வெளிநாடுகளில் கல்வி பயின்ற பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் குறித்து பட்டியலிட்ட கெஜ்ரிவால், தரமான கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com