இந்திய விமானப் படையில் இருந்து விருப்ப ஓய்வு: தனியார் பயணிகள் விமானத்தை இயக்கப்போகும் அபிநந்தன்

கோவா - ஐதராபாத் வழித்தடத்தில் அபிநந்தன் விமானத்தை இயக்கி பயிற்சி பெற்று வருகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய விமானப் படையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், தனியார் பயணிகள் விமானத்தை அபிநந்தன் இயக்கப்போகிறார்.

ரியல் ஹீரோ அபிநந்தன்

2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப் படை விமானங்கள், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

அப்போது, மிக்-21 ரக இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் அபிநந்தன், பாராசூட் மூலம் பாகிஸ்தான் பகுதிக்குள் தரையிறங்கினார். அவரை அங்குள்ள மக்கள் கடுமையாக தாக்கினார்கள். இந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவியது. அப்போது, அபிநந்தன் காட்டிய தேசப்பற்று இந்தியர்கள் அனைவரையும் பெருமையடையச் செய்தது. இந்திய மக்களால் அவர் ரியல் ஹீரோவாக பார்க்கப்பட்டார்.

22 ஆண்டுகளுக்கு பிறகு விருப்ப ஓய்வு

இறுதியில், சிறைபிடிக்கப்பட்ட விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். இவர் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், திருப்பனமூர் கிராமத்தை சேர்ந்தவர். அவரது தேசப் பற்றை பாராட்டி இந்திய அரசு வீர் சக்ரா விருதை வழங்கியது.

22 ஆண்டுகளாக இந்திய விமானப் படையில் பணியாற்றிய அபிநந்தன், தற்போது விருப்ப ஓய்வு பெற்று, பிளை 91 என்ற தனியார் விமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். தற்போது, அவருக்கு பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

என்ன காரணம்?

கோவா - ஐதராபாத் வழித்தடத்தில் அபிநந்தன் விமானத்தை இயக்கி பயிற்சி பெற்று வருகிறார். அவருக்கு இந்த பயிற்சி முடிந்தவுடன் ஏ.டி.ஆர். 72-600 ரக பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான பணி வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து பிளை 91 தனியார் விமான நிறுவன செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியம் காக்கப்படும். எனவே, அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது" என்று கூறிவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com