நம்பிக்கை வாக்கெடுப்பில் பட்னாவிஸ் அரசு தோற்றால் சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - 3 கட்சி தலைவர்கள் கடிதம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பட்னாவிஸ் அரசு தோற்றால் சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் 3 கட்சி தலைவர்கள் கடிதம் அளித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பட்னாவிஸ் அரசு தோற்றால் சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - 3 கட்சி தலைவர்கள் கடிதம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்ததை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் திடீரென கவர்னர் மாளிகைக்கு சென்றனர். சிவசேனா சட்டசபை குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல், காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை கவர்னர் மாளிகை அதிகாரியிடம் அளித்தனர். அந்த கடிதத்தில், தங்கள் கூட்டணி ஆட்சி அமைக்க போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தேவேந்திர பட்னாவிஸ் அரசு தோற்றுவிட்டால், ஆட்சி அமைப்பதற்காக சிவசேனாவை உடனே அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

3 கட்சிகள் அளித்தது போலி கடிதம்

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கவர்னர் மாளிகையில் போலி கடிதத்தை கொடுத்து உள்ளதாக பாரதீய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆஷிஸ்செலார் கூறியதாவது:-

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அஜித்பவார் நீக்கப்படவில்லை. அந்த கட்சியின் சட்டசபை தலைவராக இருந்த அஜித்பவாரின் அதிகாரங்களை தேசியவாத காங்கிரஸ் ஜெயந்த் பாட்டீலுக்கு வழங்கி உள்ளது. ஆனால் அந்த கட்சியின் சட்டசபை தலைவராக அவர் தேர்வு செய்யப்படவில்லை. அவரது அதிகாரம் மாநில கவர்னரால் இன்னும் அங்கீகரிக்கப்படவும் இல்லை. எனவே தொழில்நுட்ப ரீதியாக அஜித்பவார் தான் தேசியவாத காங்கிரஸ் சட்டசபை தலைவராக நீடிக்கிறார். அவர் பாரதீய ஜனதா ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சி தனது சட்டசபை தலைவரை இன்னும் தேர்ந்தெடுக்காத நிலையில், கவர்னர் மாளிகையில் கொடுத்த கடிதத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் பாலசாகேப் தோரட் கையெழுத்திட்டதில் எந்த அர்த்தமும் இல்லை. இதுபோன்ற காரணங்களால் 3 கட்சிகள் கவர்னர் மாளிகையில் அளித்தது போலி கடிதம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com