ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்

ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மரணம் அடைந்து கிடந்த மாணவரின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை.
ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. டெல்லியில் 2-ம் ஆண்டு பயோமெக்கானிக்கல் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவன், அதன் விடுதியில் தங்கியிருந்து உள்ளார். இந்நிலையில், நீண்டநேரம் அவர் வெளியே வரவில்லை. இதனால் சுற்றியிருந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து கிஷன்கார் காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர்.

அப்போது, அறையின் கதவு உட்புறத்தில் பூட்டப்பட்டு இருந்தது. இதன்பின்னர் தீயணைப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்கள் உதவியுடன் கதவு திறக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, அந்த மாணவர் படுக்கையில் சுயநினைவற்ற நிலையில் படுத்து கிடந்துள்ளார். அவரை ஐ.ஐ.டி. டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவர் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது.

கடந்த திங்கட்கிழமை இரவு உணவு சாப்பிட்டு விட்டு அறைக்கு திரும்பி சென்றவர், அடுத்த நாள் யாருடனும் அவர் பேசவில்லை. தொடர்பு கொள்ளவும் இல்லை என கூறப்படுகிறது. அவரை மற்ற மாணவர்கள் யாரும் பார்க்கவும் இல்லை. இதனால் சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி பாதுகாப்பு ஊழியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த மாணவரின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. எனினும், வாந்தி எடுத்ததற்கான அடையாளங்கள் தரையில் இருந்துள்ளன.

தொடர்ந்து விசாரிக்க, தடய அறிவியல் குழுவினரும் வந்தனர். அவருடைய மரணத்திற்கான உண்மையான காரணம் பற்றி பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரிய வரும். இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com