நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 3 மாதங்கள் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்தியாவில் 3 மாதங்கள் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 3 மாதங்கள் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Published on

வெயில் சுட்டெரிக்கும்

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் எப்போதுமே வெயில் வறுத்தெடுக்கும். இந்த ஆண்டு இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மகாபத்ரா காணொலிக்காட்சி வழியாக நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த ஆண்டு கோடை காலத்தில் (ஏப்ரல்-ஜூன்) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்ப நிலை அதிக அளவில் இருக்கும். தென் இந்திய தீபகற்ப பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட சில வடமேற்கு இந்திய பகுதிகளில் மட்டும் இயல்பான அளவிலோ, இயல்பை விட குறைவான அளவிலோ வெப்ப நிலை இருக்கக்கூடும்.

வெப்ப அலைகள்

பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கார், மராட்டியம், குஜராத், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஒரு இடத்தின் சமவெளியில் வெப்ப நிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) அளவுக்கும், கடலோரப்பகுதியில் 37 டிகிரி செல்சியஸ் (98.6 டிகிரி பாரன்ஹீட்) அளவுக்கும், மலைப்பிரதேசங்களில் 30 டிகிரி செல்சியஸ் (86 டிகிரி பாரன்ஹீட்) என்ற அளவில் இருக்கிறபோது அது வெப்ப அலை என அறிவிக்கப்படுகிறது.

இந்தியாவில 1901-ம் ஆண்டில் இருந்து வெப்பநிலை பதிவு செய்யப்படுகிறது. இந்த கால கட்டத்தில் பிப்ரவரி மாதத்தைப் பொறுத்தமட்டில், கடந்த பிப்ரவரி மாதம் தான் மிகுந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இயல்பான அளவில் மழை

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்:-

* இந்த ஏப்ரல் மாதம் இயல்பான அளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம். 1971 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான கடந்த காலத்தைப் பார்க்கிறபோது, ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 39.2 மி.மீ. மழை பெய்திருக்கிறது.

* இயல்பான அளவு அல்லது அதற்கு அதிகமான மழை நாட்டின் வடமேற்கு, மத்திய, தீபகற்ப பகுதிகளில் எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்யும்.

இவ்வாறு தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com