

புதுடெல்லி
டெல்லியில் பேரணி எதிரொலியாக 6 மெட்ரோ நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்படுகின்றன.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. ஏறக்குறைய 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ள சூழலில், உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
எனினும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த நீக்கத்திற்கு அவரது அரசு சார்பு நடவடிக்கைகளே காரணம் எனக்கூறி எதிர்க்கட்சியினர், அவரை பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள். தவிர, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் செய்தியாளர்களிடம் நேற்று அளித்த பேட்டியின்போது, தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி தன்மையை மத்திய அரசு குழிதோண்டி புதைத்து விட்டது. வாக்குகள் திருடப்பட்டு விட்டன என்றார்.
இதன்படி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், கார்கேவும் இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர். அவரை சந்திக்க நேரம் கேட்டிருக்கின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நோக்கி இன்று பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜீவ் சவுக், மத்திய செயலகம் மற்றும் படேல் சவுக் உள்ளிட்ட 6 டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக, பின்வரும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள நுழைவு மற்றும் வெளியேறுதல் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவித்து உள்ளது.
இதன்படி, படேல் சவுக், ஜன்பத், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம் மற்றும் பாரகாம்பா சாலை ஆகிய 6 நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், நிலைமையை அவ்வப்போது பாதுகாப்பு அமைப்புகள் ஆய்வு செய்யும். அதற்கேற்ப தேவையான புதுப்பிப்புகள் பகிரப்படும். தொடர்புடைய நிலையங்களில் பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகள் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்து உள்ளது.