

லாரியில் அள்ளிப்போடப்பட்ட முதியோர்
தூய்மையான நகரம் என்று தொடர்ந்து 4 முறை விருது பெற்ற நகரம், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரம். இந்த ஆண்டு சாவ் சர்வெக்ஷன் விருதுக்காக நகரை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போகட்டும்.
ஆனால் வீடு வாசலின்றி, ஆதரிக்க நாதியற்றுப்போய் சாலையோரங்களில் வாழ்கிற வயதானோர், என்ன குப்பைகளா, மாநகராட்சி லாரியில் அள்ளிப்போட்டு அப்புறப்படுத்துவதற்கு?
இந்த அநியாயம் அந்த இந்தூர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. நிற்கவும், நடக்கவும்கூட திராணியற்ற வயதானவர்களை, ஆணும், பெண்ணுமாய் ஏழெட்டு பேரை வலுக்கட்டாயமாக லாரியில் அள்ளிப்போட்டு, நகருக்கு வெளியேயுள்ள ஒரு கிராமத்தில் கொண்டு போய் போட்டு விட்டார்கள்.
சமூக ஊடகங்களில் வைரல்
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இது மனித குலத்தின் மீதான கறை என சாடினார். கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவிகள் செய்வதில் உண்மையான கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் சோனு சூத், இப்படிப்பட்ட வீடற்ற மக்களுக்கு இந்தூர் மக்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
முதல்-மந்திரி அதிரடி
முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்தூர் மாநகராட்சி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்தார். மாநகராட்சி நிர்வாகம் தன் பங்குக்கு 2 தற்காலிக ஊழியர்களை பணியை விட்டு நீக்கியது.
6 பேர் மட்டும் இப்படி அகற்றப்பட்டதாகவும், அவர்கள் திரும்பி அழைத்து வரப்பட்டு 3 பேர் ஒரு பராமரிப்பு இல்லத்தில் விடப்பட்டதாகவும், 3 பேர் அவர்கள் விருப்பப்படி செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் இந்தூர் மாநகராட்சி கூடுதல் கமிஷனர் ராஜாங்காங்கர் கூறி உள்ளார்.
ஆனால் 15 முதியோர் இப்படி வலுக்கட்டாயமாக இந்தூரை விட்டு அகற்றப்பட்டதாக உள்ளூர் எம்.எல்.ஏ. சஞ்சய் சுக்லா தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்டார் கலெக்டர்
இந்த நிலையில் இந்தூரில் விநாயகர் கோவில் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாவட்ட கலெக்டர் சிங், நடந்த சம்பவத்துக்காக கடவுளிடம் தான் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார்.
அப்போது அவர் கூறும்போது, இந்த சம்பவத்தில் யாரேனும் தவறு செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் அதிகாரிகள். பொறுப்பில் இருந்து விலகி விட முடியாது. எனவே எங்கள் தவறுக்காக எங்களை மன்னிக்கும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம் என குறிப்பிட்டார்.
அது சரி, அந்த கடவுள் அவர்களை மன்னிப்பாரா?