

புவனேஸ்வர்,
ஒடிசாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் ரூ.1,690 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், நிலமற்ற விவசாயிகள், கட்டுமான தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழை மக்கள், பழங்குடி மக்கள், மாநில உணவு பாதுகாப்பு பயனாளர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, 17.84 லட்சம் நிலமற்ற விவசாயிகளுக்கு ரூ.178.91 கோடியும், ரூ.206 கோடி நிலமற்ற பண்ணை விவசாயிகளின் குடும்பத்தினருக்கான உதவி தொகையும் வழங்கப்படும்.
இதேபோன்று, நகர்ப்புற ஏழை மக்களுக்காக ரூ.260 கோடியும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் தினக்கூலி தொகையுடன் ரூ.50 கூடுதல் உதவி தொகையாக வழங்கப்படும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
உணவு பாதுகாப்பு பயனாளர்களின் நலனுக்காக இலவச 5 கிலோ அரிசிக்காக ரூ.92.86 கோடியும், 66 ஆயிரத்து 214 பழங்குடியினருக்காக ரூ.33.10 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த 5.40 லட்சம் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகையாக ரூ.252.35 கோடியும், பதிவு செய்யப்பட்ட 1,500 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.360 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இந்த நிதியுதவியானது அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.