

புதுடெல்லி,
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய அமலாக்கத்துறை தனியாக விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறையின் சார்பில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கலாநிதி மாறனின் மனைவி காவேரி, தெற்கு ஆசியா எப்.எம்.நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கே.சண்முகம் ஆகியோரின் பெயர்களும் மற்றும் தெற்கு ஆசிய எப்.எம்.நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.
இதற்கிடையே, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரும் மற்றவர்களும் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 2-ந் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார். அதாவது, இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்து தனிக்கோர்ட்டு முடிவு செய்வதாக இருந்தது.
அதன்படி இந்த வழக்கில் நீதிபதி ஓ.பி.சைனி வழங்கிய 435 பக்கங்களை கொண்ட தீர்ப்பில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முகாந்திரமோ, உரிய ஆதாரங்களோ இல்லாததால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.
மத்திய தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகளும் சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வதில் அரசாங்க விதிமுறைகளை மீறியுள்ளதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான அலுவலக கோப்புகளில் உள்ள விஷயங்கள் தவறாக கையாளப்பட்டுள்ளதாகவும், சாட்சிகள் முன்னுக்கு பின் முரணாக தங்கள் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், எனவே குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பரிவு தொடர்ந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஊகத்தின் அடிப்படையில் சிவசங்கரன் அளித்த புகாரை ஏற்று சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இருந்து சி.பி.ஐ. நீதிமன்றம் மாறன் சகோதரர்களை விடுவித்திருந்ததற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்க துறை மேல்முறையீடு செய்துள்ளது. கறுப்பு பணம் பற்றி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சரியாக பரிசீலிக்க்ப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.