அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு
Published on

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து, இதற்காக அறக்கட்டளை (ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா) ஒன்றை மத்திய அரசு அமைத்து இருக்கிறது. அந்த அறக்கட்டளை, கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளை தனது புதிய அடையாள சின்னத்தை அனுமார் ஜெயந்தி தினமான கடந்த மாதம் 8-ந் தேதி வெளியிட்டது.

கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் 30-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அடிக்கல் நாட்டு விழா தள்ளி வைக்கப்பட்டது.

கோவில் கட்டுவதற்காக பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்காக அறக் கட்டளையின் சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு இருக்கிறது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நன்கொடையாக ரூ.11 லட்சம் வழங்கி உள்ளார்.

இந்த நிலையில், அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பொதுமக்கள் வந்து வணங்கும் இடம் என்பதால் கோவில் கட்டுவதற்காக வழங்கப்படும் நன்கொடை தொகைக்கு வருமான வரி சட்டம் 80ஜி(2) (பி) பிரிவின் கீழ், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியம் வெளியிட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

ராமர் கோவில் கட்டுவதற்கு பெரிய கம்பெனிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற வழிவகை ஏற்பட்டு இருப்பதாகவும், நன்கொடை தொகைக்கு வருமான வரி சட்டத்தின்கீழ் வரி விலக்கு கிடைக்கும் என்றும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் நேற்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com