

புதுடெல்லி,
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பைக்குள் கடல் வழியாக நுழைந்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டு மிராண்டித்தனமான தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகள் மூலம் இந்தியா கொடுத்த நெருக்கடியால் விசாரிப்பதாக கூறிய பாகிஸ்தான், இன்று வரையில் விசாரணையை முடிக்காமல் குற்றவாளிகளை எல்லாம் விடுவித்து இழுத்தடித்து வருகிறது.
தற்போது இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் என்று ஒரு புதிய பட்டியலை அந்நாட்டு விசாரணை முகமை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை நிராகரித்து உள்ள இந்தியா, மூளையாக செயல்பட்டவர்கள் பெயரை எல்லாம் பாகிஸ்தான் சதிதிட்டத்துடன் நீக்கியுள்ளது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த சில பயங்கரவாதிகள் பெயரை பாகிஸ்தான் பட்டியலில் இணைத்து இருந்தாலும், தாக்குதலை நடத்த மூளையாக செயல்பட்டவர்கள் மற்றும் சதிதிட்டம் தீட்டியவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் எனக் கூறியுள்ளார்.