ஐ.நா. கவுன்சில் கூட்டம்: காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.
ஐ.நா. கவுன்சில் கூட்டம்: காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Published on

புதுடெல்லி,

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 48-வது கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில், பாகிஸ்தானும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பின. அதற்கு இந்தியா தனது உரிமையை பயன்படுத்தி, உடனடியாக பதிலடி கொடுத்தது.

இதுதொடர்பாக பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் பவன் பதே, சர்வதேச அமைப்புகளை இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்வதற்கு தவறாக பயன்படுத்துவது பாகிஸ்தானின் வாடிக்கையாகி விட்டது. பாகிஸ்தானில் நடக்கும் மனித உரிமை மீறல்களை திசைதிருப்ப இப்படி செய்வது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு நன்றாக தெரியும்.

இந்தியா, மாபெரும் ஜனநாயக நாடு. எனவே, ஐ.நா.சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட பயங்கரவாதிகளை வெளிப்படையாக ஆதரிக்கும் நாடாக உலகளவில் முத்திரை குத்தப்பட்ட பாகிஸ்தான், எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை.

பாகிஸ்தானிலும், அதன் ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் இந்து, கிறிஸ்தவர், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். ஆள் கடத்தல், கட்டாய மதமாற்றம், கட்டாய திருமணம் பான்றவை நடக்கின்றன. வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதுடன், சொத்துகள் சூறையாடப்படுகின்றன. மேலும், இந்தியாவின் உள்விவகாரமான காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு உரிமை இல்லை என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com