

டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலாவது முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தனது அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை பட்டியலிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமான மற்றும் அதிக அளவிலான பொருளாதார சீர்திருத்தங்களை எங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நாடு மிகவும் வேகமாக முன்னேறுகிறது.
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த 4 ஆண்டுகளில் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைக்கப்பட்டு, பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அரசின் பல்வேறு திட்டங்களால் வங்கித்துறை வலுவடைந்தது.
நாட்டின் உள்கட்டமைப்பு துறையில் வரலாறு காணாத அளவுக்கு செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் கடந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு சாலை போடப்பட்டு உள்ளது. இது நாளொன்றுக்கு 27 கி.மீ. ஆகும். முந்தைய ஆட்சியை ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகம் ஆகும்.
இதைப்போல உடான் திட்டத்தின் கீழ் புதிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்கள், 100 விமான நிலையங்கள் மற்றும் ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இணைப்புகளை மேம்படுத்த 100க்கும் மேற்பட்ட நீர்வழிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக அனைவருக்கும் சுகாதாரம், அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் வங்கி சேவை மற்றும் அனைவருக்கும் மின்சாரம் போன்ற திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் மட்டுமே 50 கோடி குடும்பங்கள் இணைக்கப்படுகிறது. இது சுகாதார துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை கொடுக்கும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கான வழிகளை அரசு துரிதப்படுத்தி உள்ளது. முதலீட்டு பரிந்துரைகளுக்கு விரைவான அனுமதி அளிப்பதற்கான வழிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.