

டெல்லி,
இந்தியா இனி ஜனநாயக நாடு அல்ல... பிரதமர் மோடி, அமித்ஷாவால் இயக்கப்படும் சர்வாதிகார நாடாக மாறி வருவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவுகளை எடுத்துள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) உள்பட பல்வேறு கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதேவேளை, இந்த போராட்டத்தில் போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்திய பலரை போலீசார் கைது செய்தனர். சிஜேபி போராட்டம் காரணமாக டெல்லியில் ரெயில், மெட்ரோ, சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா இனி ஜனநாயக நாடு அல்ல என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு முதலில் 254 எம்.பி.க்களை சட்டவிரோதமாக தடுப்பு காவலில் வைத்து அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மறுத்தது. அதே நடைமுறையை பின்பற்றி எதிர்க்கட்சிகளின் பிற போராட்டங்களையும் முடக்குகிறது. இந்தியா இனி ஜனநாயக நாடு அல்ல... பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையில் இயக்கப்படும் சர்வாதிகார நாடாக இந்தியா மாறி வருகிறது
என்றார்.