“பாகிஸ்தானைப் போல இந்தியா தரகர் நாடு அல்ல..” - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

மத்திய கிழக்குப் போர் குறித்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாகிஸ்தானை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்தார்.
“பாகிஸ்தானைப் போல இந்தியா தரகர் நாடு அல்ல..” - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
Published on

புதுடெல்லி,

மேற்காசிய பகுதியில் அமைந்த ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக ஏவுகணைகளை கொண்டு, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. எனினும், நட்பு நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்கும் பாகிஸ்தானை ‘தரகர் நாடு’ என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய கிழக்குப் போர் குறித்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், “இந்தியா ஒருபோதும் பாகிஸ்தானைப் போல தரகர் நாடாக செயல்படாது. நமது வெளியுறவுக் கொள்கை தன்னாட்சி உடையது. நாங்கள் யாருக்காகவும் மத்தியஸ்தம் செய்வதில்லை. பாகிஸ்தானுக்கு இடைத்தரகர் வேலை ஒன்றும் புதிதல்ல. 1981 முதலே அமெரிக்கா தனது தேவைகளுக்கு பாகிஸ்தானைப் பயன்படுத்தி வருகிறது” என்று ஜெய்சங்கர் கூறினார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தரின் பங்கை வகிக்கிறது என்றும், இந்தியா ஒரு மவுன சாட்சியாக மாறிவிட்டது என்றும் காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் விமர்சித்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் பல மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ளவில்லை, மேலும் திரிணாமூல் காங்கிரசும் (TMC) கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இரண்டு மணி நேரக் கூட்டத்தில், மேற்கு ஆசியாவின் நிலைமை மற்றும் நாட்டில் உள்ள எண்ணெய், எரிவாயு இருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com