'காசா விவகாரத்தில் இந்தியா மவுனம் காக்கிறது, உலகம் தொடர்ந்து குரல் கொடுக்கிறது' - சோனியா காந்தி

காசா விவகாரத்தில் மோடி அரசின் மவுனமும், செயலற்ற தன்மையும் தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்கது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
'காசா விவகாரத்தில் இந்தியா மவுனம் காக்கிறது, உலகம் தொடர்ந்து குரல் கொடுக்கிறது' - சோனியா காந்தி
Published on

புதுடெல்லி,

காசா விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், இந்தியா மவுனம் காத்து வருகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது;-

மோடி அரசின் மவுனம்

“பாலஸ்தீனத்தில் கொடூரமாக குறிவைத்து தாக்கப்படும் குழந்தைகளுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் என இந்தியாவின் ஆன்மா கோருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலை குறித்தும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் லட்சக்கணக்கான பாலஸ்தீனிய குடும்பங்களை இடம்பெயரச் செய்து, அவர்களின் உடைமைகளைப் பறித்தது குறித்தும் மோடி அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவதை பகுத்தறிவு ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ விளக்கவே முடியாது.

ஐ.நா. விசாரணை ஆணையம்

செப்டம்பர் 2025-ல், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசம் குறித்த ஐ.நா.வின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய அதிகாரிகள் இனப்படுகொலை செய்து வருவதாக கூறியது.

ஜூன் 2026-ல், அதே ஆணையம், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் குழந்தைகளை குறிவைப்பதன் மூலம், அவர்களின் இருப்பையே அழிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என்று மீண்டும் உறுதி செய்தது.

94 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை, காசாவில் இஸ்ரேல் நிகழ்த்திய பேரழிவின் அளவு மற்றும் அதன் செயல்களுக்குப் பின்னால் உள்ள இனப்படுகொலை நோக்கம் குறித்த கொடூரமான விவரங்களுடன், மனதை உலுக்கும் ஒரு அறிக்கையாகும். குறைந்தது 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 44,000 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் மீது தாக்குதல்

குழந்தைகளைக் குறிவைப்பது தற்செயலானது அல்ல. இது ஒரு திட்டமிட்ட செயலாகும். கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்களில் 27 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவர். பல சிறுவர்கள் தலை மற்றும் கழுத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். காசாவின் 97 சதவீத பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மருத்துவமனைகள் உட்பட சுகாதார உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கருச்சிதைவு மற்றும் பிரசவச் சிக்கல்கள் 300 சதவீதம் அதிகரித்துள்ளன.

ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய கோழைத்தனமான, கொடூரமான மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளில், இஸ்ரேலிய ஆயுதப் படைகளின் பதிலடி நடவடிக்கைகள் கண்மூடித்தனமானதாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் இருந்துள்ளன.

இனப்படுகொலை

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் மூத்த இஸ்ரேலிய தலைவர்கள் காசாவை முழுமையாக அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பாலஸ்தீனியர்களை வாழ்வதற்கு உரிமையற்ற மிருகங்கள் என்று கூறிய அவர்கள், லட்சக்கணக்கானோர் காசாவில் இருந்து தப்பி ஓடுவதை இஸ்ரேலின் வெற்றியாக வரையறுத்துள்ளனர்.

இஸ்ரேலின் செயல்பாடுகளில் தெளிவான இனப்படுகொலை நோக்கம் இருந்தாலும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவு, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தனது கொடூரமான தாக்குதல்களை தொடர இஸ்ரேலுக்கு ஊக்கமளித்துள்ளது. ஆனால், உலகின் பிற நாடுகள் தங்கள் மனசாட்சிக்கு நேர்மையானதை செய்துள்ளன.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் இடையூறுகளால் ஐ.நா.வால் உறுதியான நடவடிக்கை எடுக்க இயலவில்லை. ஆனால் ஐ.நா. சபை, அதன் முகமைகள் மூலம் இஸ்ரேலின் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்துவதில் சிறந்த பங்கை ஆற்றியுள்ளது.

காசா விவகாரத்தில் உலக நாடுகள்...

வரலாற்று ரீதியாக மேற்கத்திய கூட்டமைப்புடன் தொடர்புடைய பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணி நாடுகள், பாலஸ்தீனத்தின் நலன் மீது பல ஆண்டுகளாக காட்டி வந்த அலட்சியத்திற்குப் பிறகு, தற்போது பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முன்வந்துள்ளன.

காலனித்துவ எதிர்ப்பு தொடங்கி, இந்தியாவுடன் நீண்டகாலமாக ஒற்றுமையை பகிர்ந்து கொள்ளும் நாடான தென் ஆப்பிரிக்கா, 1948-ம் ஆண்டின் இனப்படுகொலை உடன்படிக்கையை மீறியதற்காக இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்திற்கு இழுத்துள்ளது.

பல ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையைக் கட்டுப்படுத்தியுள்ளன. மேலும் பல லத்தீன் அமெரிக்க நாடுகள் அந்நாட்டுடனான தங்கள் உறவுகளை குறைத்துள்ளன அல்லது துண்டித்துள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய அரசியல் தலைமைக்குக் கைது வாரண்டுகளைக் கூட பிறப்பித்துள்ளது.

இந்தியா மவுனம் காக்கிறது

இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ள பல்வேறு நாடுகள், காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என்று அங்கீகரித்துள்ளன. இஸ்ரேலுக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையிலும், காசா மீது கட்டவிழ்த்து விடப்பட்ட நியாயப்படுத்த முடியாத கொடூரங்களை சர்வதேச சமூகம் உணர்ந்துள்ள நிலையிலும், இந்தியா, ஒரு தனிக்குரலாக மவுனம் காக்கிறது.

காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் கொடூர இனப்படுகொலைக்கு ஹிந்த் ரஜப்பின் சோகக் கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். வெறும் 5 வயதே ஆன சிறுமியான ஹிந்த் ரஜப், தன் குடும்பத்துடன் காசா நகரிலிருந்து தப்பிச் சென்றபோது, ​​இஸ்ரேலியப் படைகள் அவர்கள் சென்ற காரை நோக்கி 335 முறை சுட்டதில், அவளது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். மருத்துவ உதவியாளர்கள் அவளை மீட்க முயன்றபோது, ​​அவள் தன் உறவினர்களின் சடலங்களுடன் காரில் சிக்கிக்கொண்டாள். இறுதியில், 2 மருத்துவ உதவியாளர்களுடன் அவளும் கொல்லப்பட்டாள்.

காசா விவகாரத்தில் மோடி அரசின் மவுனமும், செயலற்ற தன்மையும் தார்மீக ரீதியாகக் கண்டிக்கத்தக்கவை மட்டுமல்ல, தேசிய நலன் கண்ணோட்டத்தில் விளக்க முடியாதவையும் ஆகும். உலகம் இஸ்ரேலிடம் இருந்து படிப்படியாக விலகிச் செல்லும் இவ்வேளையில், இந்தியா இஸ்ரேலின் மூலோபாய வட்டத்திற்குள் நழுவிச் செல்கிறது.

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்

இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிரதமர் மோடி மேற்கொண்ட இஸ்ரேல் பயணம், வரலாற்றில் ஒரு குழப்பமான மூலோபாய முடிவு என்று பதிவு செய்யப்படும். பாலஸ்தீனம், ஈரான் மற்றும் பரந்த மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நமது வரலாற்று நட்பு நாடுகளிடம் இருந்து நாம் நம்மை அந்நியப்படுத்திக் கொண்டுள்ளோம்.

உலகளாவிய பொதுக் கருத்தில் இருந்து நாம் நம்மைத் தூரப்படுத்திக் கொண்டுள்ளோம். மேலும், அனைத்து நாடுகளிலும், கொடூரமான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தும் தொடர்ந்தும் வரும் ஒரு நாடான பாகிஸ்தானை, ஒரு மத்தியஸ்தரின் இடத்தைக் கைப்பற்ற நாம் அனுமதித்துவிட்டோம். அனைத்து தரப்பினருடனும் நமக்குள்ள வரலாற்று நட்புறவைக் கருத்தில் கொண்டால், மத்தியஸ்தம் செய்வது நமக்கே உரியது என்பது தெரியவரும்.

இந்தியா தனது மூலோபாய நலன்களையும், தார்மீகத்தையும் தியாகம் செய்ததன் விளைவாக, பிரதமர் மோடிக்கும், பிரதமர் நெதன்யாகுவுக்கும் இடையிலான நட்புறவைத் தவிர வேறு எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. தற்போது நெதன்யாகு அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com