இந்தியாவுடன் தபால் போக்குவரத்தை நிறுத்திய பாகிஸ்தான் - விதிமீறல் என மத்திய மந்திரி கண்டனம்

இந்தியாவுடனான தபால் போக்குவரத்தை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளது. இது சர்வதேச விதிமீறல் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் தபால் போக்குவரத்தை நிறுத்திய பாகிஸ்தான் - விதிமீறல் என மத்திய மந்திரி கண்டனம்
Published on

புதுடெல்லி,

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றநிலை நீடித்து வருகிறது. எல்லையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவுடன் தூதரக உறவையும் பாகிஸ்தான் துண்டித்தது.

இதற்கிடையே ஆகஸ்டு 27-ந் தேதியில் இருந்து இந்தியாவில் இருந்துவரும் தபால் துறை கடிதங்களை பெறுவதற்கு பாகிஸ்தான் மறுத்துவருகிறது. அதேபோல பாகிஸ்தானில் இருந்தும் இந்தியாவுக்கு கடிதங்கள் அனுப்பப்படுவதையும் நிறுத்திவிட்டதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி இந்திய தபால் துறை இயக்குனர் ஆர்.வி.சவுத்ரி கூறுகையில், பாகிஸ்தானின் இந்த முடிவு முற்றிலும் தவறானது. இதுபோன்ற நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்வது இதுவே முதல் முறை. போர் நடைபெற்றபோது கூட தபால் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. இந்த உத்தரவை பாகிஸ்தான் எப்போது விலக்கிக்கொள்ளும் என தெரியவில்லை என்றார்.

இதுபற்றி தபால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தானுக்கு செல்லும் கடிதங்கள் பெரும்பாலும் பஞ்சாப், காஷ்மீரில் இருந்தே அனுப்பப்படும். இவற்றில் பல படிப்பு தொடர்பானதாகவே இருக்கும் என்றார்.

இதுகுறித்து தபால் துறையை கவனித்துவரும் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் நோட்டீசோ அல்லது தகவலோ முன்கூட்டி அனுப்பாமல் இந்தியாவுடன் தபால் துறை கடித போக்குவரத்தை கடந்த 2 மாதங்களாக நிறுத்தியுள்ளது. இந்த தகவல் தெரிந்தபின்னர் இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என இந்திய தபால் துறை ஆலோசித்து வருகிறது.

உலகளவில் தபால் போக்குவரத்துக்கென ஒரு சீரான விதிமுறை உள்ளது. அதன்படி தான் அனைவரும் செயல்பட வேண்டும். ஆனால் பாகிஸ்தானின் நடவடிக்கை இந்த சர்வதேச தபால் துறை விதிகளை நேரடியாக மீறுவதாகும். அதுதான் பாகிஸ்தான். உடனடியாக தனது முடிவை பாகிஸ்தான் திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com