ரூ.35 ஆயிரம் கோடி ராணுவ தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்யும் - ராஜ்நாத் சிங் பேச்சு

இந்தியா ரூ.35 ஆயிரம் கோடி ராணுவ தளவாட ஏற்றுமதியை எட்டிப்பிடிக்கும் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
ரூ.35 ஆயிரம் கோடி ராணுவ தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்யும் - ராஜ்நாத் சிங் பேச்சு
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கர்நாடக ராஜ்ய உத்சவ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியவதாவது:-

இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக நமது ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.17 ஆயிரம் கோடியாக உள்ளது.

ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் உங்கள் (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்) திறனைப் பார்க்கிறபோது, 2024-ம் ஆண்டுவாக்கில் இந்தியா ரூ.35 ஆயிரம் கோடி ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நிலையை எட்டிப்பிடிக்கும் என நம்புகிறேன்.

இந்தியா ராணுவ தளவாட இறக்குமதிக்கு நீண்ட காலமாக பிற நாடுகளை சார்ந்து இருக்க முடியாது. பிரதமர் மோடியின் திட்டமான இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தின்கீழ், ராணுவ பொதுத்துறை நிறுவனங்கள் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.

இந்தியாவை ராணுவ தளவாட இறக்குமதி நாடாக பார்க்க நாங்கள் விரும்பவில்லை. அதற்கு பதிலாக உங்கள் வலிமையால், இந்தியா நிச்சயம் ராணுவ தளவாட ஏற்றுமதி நாடாக மாற முடியும் என்று என்னால் சொல்ல முடியும். இந்தியாவை இதில் இருந்து யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

ராணுவ பொதுத்துறை நிறுவனங்களில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் செயல்திறன் பாராட்டுக்குரியது. கடந்த ஆண்டு மார்ச் வரையில் இந்த நிறுவவனத்தின் வருமானம் ரூ.19 ஆயிரத்து 705 கோடி ஆகும். இந்த நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு 198 சதவீத பங்காதாயம் அளித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு திறமைகள் மறைந்து இருக்கின்றன. அவற்றை வெளியே கொண்டு வர வேண்டும். அதை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கண்டறிந்து, வளர்ந்து செழிப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்கி தர வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com