சர்வதேச விமான கண்காட்சிக்காக இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகச குழு எகிப்து சென்றடைந்தது

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ‘துருவ்’ ஹெலிகாப்டர்களுடன், எகிப்து வான்வெளியை அசத்தத் தயாராகியுள்ளது இந்தியாவின் புகழ்பெற்ற ‘சாரங்’ சாகசக் குழு
கண்காட்சிக்காக இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகச குழு எகிப்து சென்றடைந்தது
துருவ்’ ஹெலிகாப்டர்கள்
Published on

புதுடெல்லி,

எகிப்தில் நாளை தொடங்கவுள்ள சர்வதேச விமான கண்காட்சியில் பங்கேற்பதற்காக, இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற ‘சாரங்’ ஹெலிகாப்டர் சாகச குழு எகிப்து சென்றடைந்துள்ளது. அங்கு அவர்கள் ‘டால்பின் லீப்’ உள்ளிட்ட மெய்சிலிர்க்க வைக்கும் வான் சாகசங்களை நிகழ்த்தி அசத்த உள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

2-வது சர்வதேச விமான கண்காட்சி

எகிப்தில் உள்ள எல் அலமெய்ன் சர்வதேச விமான நிலையத்தில், எல் அலமெய்ன் சர்வதேச விமான கண்காட்சியின் 2-வது பதிப்பு நாளை தொடங்கி 10-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சர்வதேச வான் கண்காட்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையின் ‘சாரங்’ ஹெலிகாப்டர் சாகச குழு எகிப்து நாட்டின் எல் அலமெய்ன் நகரை சென்றடைந்துள்ளது.

இந்திய விமானப்படையின் ‘சாரங்’ ஹெலிகாப்டர் சாகசக் குழு
சாரங்

துருவ் ஹெலிகாப்டர்

இந்தியாவில் உள்நாட்டிலேயே மிக நேர்த்தியாக வடிவமைத்து தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரான ‘துருவ்’ ஹெலிகாப்டர்களை இந்த சாரங் குழுவினர் வான்வழி சாகசங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

புதிய வான் சாகசம் அறிமுகம்

மிகவும் துல்லியமாகவும், தொழில்முறை திறன்களுடனும் வான் சாகசங்களை நிகழ்த்துவதில் உலக புகழ்பெற்ற இந்த சாரங் குழு, இந்த கண்காட்சியில் தங்களின் புகழ்பெற்ற ‘டால்பின் லீப்’ சாகசத்தை வான்வெளியில் செய்து காட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தவுள்ளது.

இந்திய விமானப்படை
துருவ்

அதுமட்டுமின்றி, உலகிலேயே முதன்முறையாக ‘ஸ்பாட் ஸ்டால் டர்ன்’ எனப்படும் புத்தம் புதிய வான் சாகச முறையையும் இக்கண்காட்சியில் இந்திய விமானப்படை வீரர்கள் அறிமுகம் செய்து, செய்து காண்பிக்க இருக்கிறார்கள். இது உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்து ஆர்வலர்களுக்கு இந்திய விமானப்படையின் துணிச்சலையும், வீரத்தையும் நேரில் காண்பதற்கான ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.

பாதுகாப்பு உறவில் மைல்கல்

இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையே அண்மைக்காலமாக பாதுகாப்பு மற்றும் தூதரக உறவுகள் பலப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், எகிப்து வான் கண்காட்சியில் இந்திய விமானப்படை பிரிவினர் பங்கேற்பது இரு நாடுகளின் வளர்ந்து வரும் உறவை மேலும் பிரதிபலிக்கும் வகையிலும், இந்திய விமானப்படையின் சர்வதேச ஈடுபாடுகளில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும் அமைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com