கடல்சார் உளவுப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய கடற்படை

1971-ம் ஆண்டு போருக்கு பிறகு, போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் இணைந்து செயல்படக்கூடிய கடல்சார் ரோந்து விமானங்களின் தேவை அவசியமானது.
கடல்சார் உளவுப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய கடற்படை
ரோந்து விமானம்
Published on: 

புதுடெல்லி,

இந்திய கடற்படை தனது நீண்டதூர கடல்சார் உளவு நடவடிக்கைகளின் 50-வது ஆண்டு பொன்விழாவை இன்று சிறப்பாக கொண்டாடியது.

ஆல்பட்ராஸ் படைப்பிரிவு

இந்திய கடற்படையின் 'ஆல்பட்ராஸ்' எனப்படும் 'ஐஎன்ஏஎஸ் 312' விமானப்படை பிரிவு செயல்பாட்டிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த அரை நூற்றாண்டாக இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வான்வழியில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பு பணிகளை நினைவுகூரும் விதமாக இந்த பொன்விழா கொண்டாடப்படுகிறது.

ஐஎன்ஏஎஸ் 312 படைப்பிரிவு

1971-ம் ஆண்டு போருக்கு பிறகு, போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் இணைந்து செயல்படக்கூடிய கடல்சார் ரோந்து விமானங்களின் தேவை அவசியமானது. இதையடுத்து, நீண்டதூர கடல்சார் உளவுப்பணிக்கான முழுப் பொறுப்பையும் இந்திய கடற்படை ஏற்றுக்கொண்டது. அதன்படி, 1976-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா தளத்தில், 5 லாக்ஹீட் சூப்பர் கன்ஸ்டலேசன் விமானங்களுடன் 'ஐஎன்ஏஎஸ் 312' படைப்பிரிவு பணியில் சேர்க்கப்பட்டது.

ரோந்து பணி

கடந்த 50 ஆண்டுகளில் கடற்படையின் உளவுத் திறன் படிப்படியாக நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. 1977-ம் ஆண்டு 'இல்யூசின் 2-38' விமானம் இணைக்கப்பட்டதன் மூலம் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் திறன் வலுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 1988-ம் ஆண்டு 'டுபோலேவ் டு-142 எம்' விமானம் சேர்க்கப்பட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து பணி விரிவுபடுத்தப்பட்டது.

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி

இதன் அடுத்தகட்டமாக, 2013-ம் ஆண்டு தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் உள்ள 'ஐஎன்எஸ் ராஜாளி' கடற்படை விமான தளத்தில் அதிநவீன 'போயிங் பி-81' உளவு விமானம் இணைக்கப்பட்டது. இது இந்திய கடற்படையின் வான்வழி உளவு மற்றும் கண்காணிப்பு பணியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

X