இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் சாதனை: 1,200 கி.மீ. பயணம்; 3,200 லிட்டர் டீசல் மிச்சம்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை கடந்த 17-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் சாதனை: 1,200 கி.மீ. பயணம்; 3,200 லிட்டர் டீசல் மிச்சம்
Published on

புது டெல்லி,

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் இதுவரை 1,200 கி.மீ. தூரம் பயணித்திருப்பதாகவும், இதன் மூலம் 3,200 லிட்டர் டீசல் பயன்பாடு மிச்சப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் ஹைட்ரஜன் ரெயில்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை கடந்த 17-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் இடையேயான வழித்தடத்தில் இந்த பயணிகள் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு இடையேயான ரசாயன மாற்றம் நிகழ்வதன் மூலம் ஏற்படும் மின்சாரத்தை பயன்படுத்தி பயணிக்கிறது. இந்த செயல்பாட்டின் போது வெளிவரும் ஒரே கழிவு அல்லது உபபொருள் நீர் ஆவி மட்டுமே ஆகும். இதில் எந்தவித காற்று மாசுபாடும் கிடையாது. 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின்கீழ் இந்திய ரெயில்வே துறையினால் முற்றிலும் உள்நாட்டிலேயே இது வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவின் இந்த ரெயில் பயணத் திட்டம் பசுமை போக்குவரத்து துறையில் ஒரு பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.

3,200 லிட்டர் டீசல் மிச்சம்

அதற்கேற்றாற்போல், கடந்த 17-ந் தேதி தொடங்கிவைக்கப்பட்ட இந்த ரெயில் சேவை மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, இதுவரை சுமார் 1,200 கி.மீ.க்கும் அதிகமான தூரத்துக்கு தன் பயணத்தை ஹைட்ரஜன் ரெயில் மேற்கொண்டு இருப்பதாகவும், இதே பயணதூரத்தில் சாதாரணமாக டீசல் என்ஜின் மூலம் ரெயில்சேவை வழங்கப்பட்டிருந்தால், சுமார் 3,200 லிட்டருக்கும் அதிகமான டீசல் செலவு ஆகியிருக்கும் எனவும், தற்போது அவை மிச்சப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மேலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் புகை மற்றும் கார்பன் உமிழ்வு முழுமையாக தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிந்த்-சோனிபட் இடையேயான இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் பயண வெற்றியை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக டெல்லி மார்க்கத்திலும் சோதனை ஓட்டங்கள் நடத்தப்படவுள்ளன. 2030-க்குள் இந்திய ரெயில்வே துறையை 'நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு' கொண்ட அமைப்பாக மாற்றும் இலக்கிற்கு இந்த ஹைட்ரஜன் ரெயில்கள் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com