வெள்ள எச்சரிக்கை குறித்து பாகிஸ்தானை அக்கறையுடன் எச்சரித்த இந்தியா


வெள்ள எச்சரிக்கை குறித்து பாகிஸ்தானை அக்கறையுடன் எச்சரித்த இந்தியா
x

Image Courtacy: PTI

சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்ட நிலையில், தாவி நதியில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது.

புதுடெல்லி,

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் தாவி நதியில் வெள்ள எச்சரிக்கை குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா தகவல் அளித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, பின்னர் அது இஸ்லாமாபாத்தை தொடர்பு கொண்டது என்று ஜல் சக்தி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

"ஒப்பந்தம் இடைநிறுத்தப்படுவதற்கு முன்பு இந்தியா, பாகிஸ்தானுடன் தரவுகளைப் பரிமாறிக் கொண்டாலும், இந்த நடவடிக்கை முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது" என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவி நதி இமயமலையில் உருவாகி ஜம்மு பிரிவு வழியாகச் சென்று பாகிஸ்தானில் உள்ள செனாப் நதியில் ஒன்றுகூடுகிறது.

முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து நதியின் துணை ஆறுகளான சட்லஜ், பியாஸ், மற்றும் ரவி ஆகிய கிழக்கு நதிகளின் நீர் இந்தியாவின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.

அதே சமயம், சிந்து, செனாப், மற்றும் ஜீலம் ஆகிய மேற்கு நதிகளின் நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் நீர்ப் பங்கீட்டிற்கு ஒரு முக்கிய வழியாக இருந்து வந்தது. இந்தசூழலில் கடந்த ஏப்ரல் 22 ம் தேதியன்று பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு, இந்தியா, பாகிஸ்தானுடன் நதிநீர் மட்டம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதை நிறுத்திக்கொண்டது.

இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா விடுத்த இந்த வெள்ள அபாய எச்சரிக்கை, பாகிஸ்தான் மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வு, எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story