தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்

இந்தியாவின் பெரிய நகரம் (10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை) என்ற அந்தஸ்து குஜராத்தின் ஆமதாபாத் நகரம் பெற்றுள்ளது.
புதுடெல்லி,
உலகின் தூய்மையான நகரங்களுக்கான மிக பெரிய சர்வே 9-வது ஆண்டாக இந்த ஆண்டும் நடந்தது. இதன்படி, 2024-25 ஆண்டுக்கான, ஸ்வச் சர்வேக்சன் எனப்படும் தூய்மையை கணக்கெடுக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. தூய்மையை நோக்கிய இந்திய நகரங்களின் பயணம் என்பதற்கான வரையறையை குறிக்கும் வகையில் ஸ்வச் சர்வேக்சன் திட்டம் அமைந்துள்ளது.
இதன் அடிப்படையில், நடப்பு ஆண்டில் மொத்தம் 78 விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விருது வழங்கும் விழா புதுடெல்லியில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
இதில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. 8-வது முறையாக தொடர்ந்து முதல் இடம் பிடித்து இந்த பெருமையை தக்க வைத்து கொண்டது. 2-வது இடம் சூரத்திற்கும், 3-வது இடம் நவி மும்பைக்கும் கிடைத்துள்ளது.
இதேபோன்று இந்தியாவின் பெரிய நகரம் (10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை) என்ற அந்தஸ்து குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு கிடைத்துள்ளது. இதற்காக, குஜராத் அரசு சார்பில் மந்திரி ருஷிகேஷ் பட்டேல் சென்று விருது பெற்று கொண்டார். சூரத் நகருக்கான விருது பெற்ற குஜராத் உள்துறை மந்திரி ஹர்ச சங்கவி பேசும்போது, இதற்காக உழைத்த அனைவருக்கும், குறிப்பிடும்படியாக தூய்மை பணியாளர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.






