ஹனிமூன் சென்ற இடத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற புதுப்பெண் - நாட்டையே உலுக்கிய சம்பவம்

புதுமணத்தம்பதியான ராஜாவும் , சோனமும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஷிலாங்,
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவஞ்சி. இவருக்கும் சோனம் என்பவருக்கும் கடந்த மாதம் 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. புதுப்பெண் சோனத்தின் தந்தையும் இந்தூரில் பிளேவுட் கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார்.
இதனிடையே, புதுமணத்தம்பதியான ராஜாவும் , சோனமும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஹனிமூனுக்கு இருவரும் கடந்த மாதம் 20ம் தேதி மேகாலயா சென்றுள்ளனர்.
மேகாலயாவில் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த தம்பதி 22ம் தேதி கிழக்கு காலிஷ் ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். ஸ்கூட்டரை மஹ்லாஹெட் கிராமத்தில் நிறுத்திவிட்டு நாங்ரொட் என்ற மலைகிராமத்திற்கு நடந்து சென்றுள்ளனர்.
மலையேற்ற வழிகாட்டி உதவியுடன் சென்றபோது மாலை வெகுநேரம் ஆனதால் ஷிபாரா என்ற கிராமத்தில் தம்பதி தங்கியுள்ளனர். பின்னர், நாங்ரொட் மலைகிராமத்திற்கு நாங்களே சென்றுவிடுகிறோம் என்று மலையேற்ற வழிகாட்டியிடம் கூறியுள்ளனர். இதனால், மலையேற்ற வழிகாட்டி இருவரையும் வீட்டுவிட்டு தனியே மஹ்லாஹெட் கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், மறுநாளான 23ம் தேதி புதுமணத்தம்பதியான ராஜா ரகுவஞ்சி மற்றும் சோனத்தின் செல்போன் எண்கள் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளன. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து மத்தியபிரதேச போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, மத்தியபிரதேச போலீசார், மேகாலயா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மேகாலயா போலீசார், காணாமல்போன ராஜா, சோனம் தம்பதியை தீவிரமாக தேடினர். அப்போது, தம்பதி ஓட்டிவந்த ஸ்கூட்டர் ஷிலாங் - சொஹ்ரா சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததை 24ம் தேதி போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்திய நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

11 நாட்கள் கழித்து புதுமாப்பிள்ளை ராஜா ரகுவஞ்சி சடலமாக மீட்கப்பட்டார். தம்பதி தங்கி இருந்த இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சிரபூஞ்சி பள்ளத்தாக்குப்பகுதியில் கடந்த 2ம் தேதி ராஜா சடலமாக மீட்கப்பட்டார். அவர் கத்தியால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் காணாமல் போன ராஜாவின் மனைவி சோனத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அதேவேளை, காணாமல் போன சோனம் உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூரில் வைத்து போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கணவர் ராஜாவை புதுப்பெண் சோனமே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது. சோனத்திற்கும் அவரது தந்தை நடத்திவரும் பிளேவுட் கடையில் வேலை செய்துவந்த ராஜ் குஷாலா என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. சோனத்தைவிட குஷாலா 5 வயது குறைவான இளைஞர் ஆவார்.

கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்த நிலையில் சோனத்திற்கு ராஜா ரகுவஞ்சியுடன் திருமணம் ஆகியுள்ளது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சோனம் தனது கள்ளக்காதலன் குஷாலுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக அடியாட்கள் 4 பேருக்கு பணம் கொடுத்துள்ளனர்.
கணவரை சோனம் மேகாலயாவுக்கு ஹனிமூன் அழைத்து சென்றுள்ளார். அங்கு மலைப்பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சேனம் ஏற்பாடு செய்த வைத்து அடியாட்கள் ராஜா ரகுவஞ்சியை கடத்திச்சென்று கொலை செய்துள்ளனர். உடலை சிரபூஞ்சி பள்ளத்தாக்கு பகுதியில் வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சோனம் அவரது கள்ளக்காதலன் குஷாலா மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தனது மகள் நிரபராதி என்றும் அவர் ரகுவஞ்சியை கொலை செய்யவில்லை என்றும் சோனத்தின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த வழக்கை திசைதிருப்பவே தனது மகளை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஹனிமூன் சென்ற இடத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனை புதுப்பெண் கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.