பூஜா கேத்கரை கைது செய்ய போலீசாருக்கு இடைக்கால தடை

பூஜா கேத்கரை கைது செய்ய போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பூஜா கேத்கரை கைது செய்ய போலீசாருக்கு இடைக்கால தடை
Published on

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் புனே கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அந்தஸ்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேத்கர்(வயது34). விதிமுறையை மீறி தனது சொகுசு காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியது, அலுவலகத்தில் தனியறை கேட்டு அடம் பிடித்தது, கூடுதல் கலெக்டரின் அறையை ஆக்கிரமித்தது போன்ற வெவ்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

இதையடுத்து வாசிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். சர்ச்சைகளுக்கு மத்தியில் பூஜா கேத்கர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது குறித்து விசாரிக்க மத்திய அரசின் கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.

இதற்கிடையே பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கர் நிலப்பிரச்சினையில் விவசாயியை துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல அவரது தந்தை திலீப் கேத்கர் அரசு அதிகாரியாக இருந்த போது 2 முறை லஞ்ச வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் பூஜா கேட்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்படம், கையெழுத்து, இ-மெயில் ஐ டி, செல்போன் எண், முகவரி ஆகியவற்றை மாற்றி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவர் மீது போலீசில் மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளது. இதையடுத்து, முறைகேடு புகார்களில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சியை, யு.பி.எஸ்.சி. ரத்து செய்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பூஜா கேத்கர், தனக்கு முன்ஜாமீன் மறுத்த டெல்லி பட்டியாலா கோர்ட்டின் முடிவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு இன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், பூஜா கேத்கரை உடனடியாகக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில், அடுத்த விசாரணை தேதி (ஆகஸ்ட் 21) வரை மனுதாரரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என கூறி கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பூஜா கேத்கரை ஏன் காவலில் எடுக்க வேண்டும் என்பதற்கு பதில் அளிக்குமாறு டெல்லி போலீசார் மற்றும் யுபிஎஸ்சிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com