2026-ம் ஆண்டுக்கான சர்வதேச தேர்தல் மாநாடு; 70 நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்பு

உலகின் மிக பெரிய தேர்தலான 2024 மக்களவை தேர்தலுக்கு தயாரானது தொடர்பான விரிவான ஆவண படம் ஒன்று இன்று காட்சிப்படுத்தப்பட உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் தலைமையில் 2026-ம் ஆண்டுக்கான ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச மாநாடு இன்று நடைபெறுகிறது. 3 நாள் நடைபெற கூடிய இந்த மாநாட்டில் ஞானேஷ் குமார் உடன் தேர்தல் ஆணையாளர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோரும் மாநாட்டுக்கு தலைமையேற்கின்றனர்.
இந்த மாநாடானது, ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்காக இந்தியா நடத்த கூடிய மிக பெரிய உலகளாவிய மாநாடாக அமையும். இதனை முன்னிட்டு, உலகம் முழுவதும் இருந்து 70 நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் குழுவினர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் வரவேற்றார்.
அவர்களுடன் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட கூடிய கல்வியாளர்கள் மற்றும் பயிற்சி நிபுணர்களும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில், உலகம் முழுவதும் எதிர்கொள்ள கூடிய பல்வேறு சவால்களை பற்றிய விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி 40-க்கும் மேற்பட்ட இருதரப்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. முதல் நாளான இன்று, உலகின் மிக பெரிய தேர்தலான 2024 மக்களவை தேர்தலுக்கு தயாரானது தொடர்பான விரிவான ஆவண படம் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.






