

புதுடெல்லி,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிறப்பு சர்வதேச பயணிகள் விமான சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடப்பு டிசம்பர் 15ந்தேதி முதல் வழக்கமான சர்வதேச பயணிகள் விமான சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய ஒமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக, விமான சேவையை துவக்குவது தள்ளி வைக்கப்படுகிறது என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 32 நாடுகளுக்கான சிறப்பு விமான சேவை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.