"தமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் அவசியமா..?" - வெளியுறவுத்துறை விளம்பரத்தால் சர்ச்சை

தமிழ் மொழி ஆசிரியர் பணி விளம்பரம் தொடர்பான இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது.
"தமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் அவசியமா..?" - வெளியுறவுத்துறை விளம்பரத்தால் சர்ச்சை
Published on

புதுடெல்லி,

இந்திய கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICCR) குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தமிழ் மொழி ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்காக இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று, விளம்பரம் வெளியிட்டதுடன், இணைய தளத்திலும் பதிவேற்றி இருந்தது. தகுதி, அனுபவம், விண்ணப்பப் படிவம், விதிமுறைகள், நிபந்தனைகள் போன்ற விவரங்களை ஐ.சி.சி.ஆர். இணையதளத்தில் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் விண்ணப்பங்கள் கவுன்சிலால் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என்றும் ஐ.சி.சி.ஆரால் தேர்வு செய்யப்படுபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இது சம்பந்தமாக எவ்வித வினாக்களும் எழுப்ப இயலாது என்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 17ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பணி அனுபவம்

தமிழ் இலக்கியத்தில் முதுநிலைப் பட்டத்துடன் பி.எட். அல்லது எம்.எட். மேலும் பள்ளி / நிறுவனத்தில் தமிழாசிரியராக ஐந்து ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல பயிற்சி, கணினி அறிவு ஆகியவற்றுடன் இந்திய தத்துவம், வரலாறு, இசை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

தகுதிகள்,விரும்பத்தக்கது

இந்தியும், சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் கூடுதலாக வேறொரு அயல்நாட்டு மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சர்ச்சை ஆன நிலையில், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் தான், ஆனால், இந்தியும் சமஸ்கிருதமும் எதற்காகத் தெரிந்திருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com