டெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது; வெடிகுண்டுகள் பறிமுதல் - மிகப்பெரிய தாக்குதல் சதி முறியடிப்பு

டெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவரை பயங்கர துப்பாக்கி சண்டைக்குப்பின் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பயங்கர வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது; வெடிகுண்டுகள் பறிமுதல் - மிகப்பெரிய தாக்குதல் சதி முறியடிப்பு
Published on

புதுடெல்லி,

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்தியாவில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்தகீம் கான் என்ற அபு யூசுப் என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்ததை புலனாய்வுப்பிரிவினர் கண்டறிந்தனர். எனவே கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக முஸ்தகீம் கானின் நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் முஸ்தகீம் கான் டெல்லி ரிட்ஜ் ரோடு வழியாக நேற்று முன்தினம் இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றதை டெல்லி பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கண்டறிந்தனர். உடனே அவர்கள் தவுலா குவான் மற்றும் கரோல் பாக் பகுதிகளுக்கு இடையே அவரை சுற்றி வளைத்தனர்.

அப்போது முஸ்தகீம் கான், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசார் மீது சுட்டார். உடனே போலீசாரும் திருப்பி சுட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை மூண்டது. இறுதியில் போலீசார் முஸ்தகீம் கானை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 2 பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் விரைந்து வந்து, ரோபோ உதவியுடன் அந்த வெடிகுண்டுகளை பத்திரமாக செயலிழக்க வைத்தனர்.

முஸ்தகீம் கான் வைத்திருந்த வெடிகுண்டுகள் இரண்டும் முழுவதும் தயார் நிலையில் இருந்தது. எனவே அவர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அவர் போலீசிடம் சிக்கியிருப்பதன் மூலம் மிகப்பெரிய தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்ட முஸ்தகீம் கானிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி பயங்கரவாதி கான் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீஸ் துணை கமிஷனர் (சிறப்பு பிரிவு) குஷ்வாகா பின்னர் வெளியிட்டார்.

அதன்படி சுதந்திர தினத்தில் தாக்குதல் நடத்துவதற்காக சமீபத்தில் கான் டெல்லிக்கு வந்துள்ளார். இதற்காக அந்த வெடிகுண்டுகளை வாங்கவோ அல்லது தயாரிக்கவோ செய்துள்ளார். ஆனால் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலமாக இருந்ததால், அவரால் தாக்குதலை நிறைவேற்ற முடியவில்லை.

தற்போது பாதுகாப்பு கெடுபிடிகள் குறைந்ததால் குண்டுகள் வைப்பதற்காக டெல்லிக்கு வந்துள்ளார். ஆனால் போலீசாரிடம் சிக்கியதால் இந்த தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல முஸ்தகீம் கானை போலீசார் கண்காணித்ததில், அவர் தொடர்ந்து ஐ.எஸ். அமைப்பினரால் வழிநடத்தப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. தற்போதும் அவரை வழிநடத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவர், தனி ஓநாய் தாக்குதலை அரங்கேற்றுவதற்கு முஸ்தகீமுக்கு அறிவுறுத்தியதாகவும், அதன்படி தாக்குதலை அரங்கேற்ற அவர் டெல்லி வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.டெல்லியில் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய பின், தற்கொலை தாக்குதலில் ஈடுபடவும் முஸ்தகீம் கான் திட்டமிட்டு இருந்ததாகவும், இதற்காக தனது வீட்டுக்கு அருகிலேயே பல்வேறு சோதனைகளை அவர் நடத்தி வந்ததாகவும் குஷ்வாகா தெரிவித்தார்.

இதற்கிடையே ஐ.எஸ். பயங்கரவாதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தலைநகர் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். டெல்லி-உத்தரபிரதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இதைப்போல அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் குறிப்பாக களத்தில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும் மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி. ஹிதேஷ் சந்திர அவஸ்தி அறிவுறுத்தி உள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com