

சென்னை,
சென்னை மயிலாப்பூரில் பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் வானதி சீனிவாசன் ஆவேசமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இடைத்தேர்தல் வந்ததற்கு காரணமே த.வெ.க.தான். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வை இழுத்து கொண்டு வந்து த.வெ.க. சார்பில் அதே தொகுதியில் நிற்க வைக்கிறார்கள். ஏனென்றால், அவர்களிடம் போதுமான எம்.எல்.ஏ.க்கள் இல்லை. அனைவருக்கும் இது தெரியும்” என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு, “வட இந்தியாவில் பா.ஜ.க.வும் இதைத் தானே செய்கிறது? இங்கு இவர்கள் செய்கிறார்கள். அப்படியென்றால் த.வெ.க.வை பா.ஜ.க.வின் மற்றொரு வெர்ஷன் என்று சொல்லலாம் தானே?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு வானதி சீனிவாசன், “நான் இங்கு நடப்பதைத்தான் பேச முடியும். என்னுடன் வாக்குவாதம் செய்ய வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமாக இருக்கிறது. ஒரு பத்திரிகையாளரின் கேள்வி எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும்” என்று கூறினார். இருப்பினும் செய்தியாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் ஆவேசமடைந்த வானதி சீனிவாசன், “நான் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கிறேன். ஆனால் நீங்கள் வாக்குவாதம் செய்கிறீர்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.