‘தர்மஸ்தலா விவகாரத்தில் சதி இருப்பதாக கூறியது எனது தனிப்பட்ட கருத்து’ - டி.கே.சிவக்குமார்


‘தர்மஸ்தலா விவகாரத்தில் சதி இருப்பதாக கூறியது எனது தனிப்பட்ட கருத்து’ - டி.கே.சிவக்குமார்
x

தர்மஸ்தலா விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

தர்மஸ்தலா விவகாரத்தில் சதி இருப்பதாக நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்து என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“தர்மஸ்தலா விவகாரத்தில் மர்ம நபர் போலீசில் புகார் அளித்தபோது பா.ஜ.க.வினர் மவுனம் காத்தனர். அதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அவர்கள் தற்போது இதில் அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்கள் இந்துமதம் தங்களின் சொந்த சொத்து என்று நினைக்கிறார்கள். அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே தர்மஸ்தலா அவர்களுக்கு தேவை.

சிறப்பு புலனாய்வு குழு அமைத்தபோது கூட பா.ஜனதாவினர் எதுவும் பேசவில்லை. தர்மஸ்தலாவின் கவுரவத்தை காக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. புகார் கொடுத்த மர்ம நபருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று கேட்பதில் தவறில்லை. புலனாய்வு குழு அமைத்ததை வரவேற்ற பா.ஜ.க.வினர் இப்போது மாற்றி பேசுவது ஏன்?

எங்கெங்கு தோண்ட வேண்டும் என்று விசாரணை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். இதில் நாங்கள் தலையிட மாட்டோம். இந்த விவகாரத்தில் சதி இருப்பதாக நான் கூறினேன். இது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் விசாரணையில் தலையிட மாட்டேன். இந்த விவகாரத்தில் யாருக்கும் அநீதி ஏற்பட முதல்-மந்திரி சித்தராமையா அனுமதிக்க மாட்டார். சட்டம் தனது கடமையை செய்யும். விசாரணையில் தலையிட மாட்டேன். விசாரணை அதிகாரிகள் பற்றி எனக்கு தெரியாது. போலீஸ் மந்திரி தான் இந்த விவகாரத்தை கையாள்கிறார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story