‘நெதன்யாகுவின் தோல்விக்கு ஐ.யூ.எம்.எல். இளைஞரணியும் ஒரு காரணம்...’ - இணையத்தில் கேலிக்குள்ளாகும் கேரள மந்திரியின் பேச்சு

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.யூ.எம்.எல். இளைஞரணி ஏற்பாடு செய்த போராட்டங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதாக கே.எம்.ஷாஜி கூறியுள்ளார்.
‘நெதன்யாகுவின் தோல்விக்கு ஐ.யூ.எம்.எல். இளைஞரணியும் ஒரு காரணம்...’ - இணையத்தில் கேலிக்குள்ளாகும் கேரள மந்திரியின் பேச்சு
Published on: 

திருவனந்தபுரம்,

இஸ்ரேல் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகளின்படி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் உருவானது.

தேர்தல் முடிவுகள்

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கு 2 அரபு கட்சிகள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனால் ஐசன்கோட் கூட்டணியின் பலம் 67 ஆக அதிகரித்தது. அதே சமயம், நெதன்யாகு தலைமையிலான கூட்டணியின் பலம் 46 ஆக உள்ளது. இதன் மூலம் ஐசன்கோட் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளது.

நெதன்யாகுவின் தோல்வி

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் தோல்விக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் இளைஞரணி ஒரு முக்கிய காரணம் என கேரள மந்திரியும், மாநில ஐ.யூ.எம்.எல். இளைஞரணியின் தலைவருமான கே.எம்.ஷாஜி தெரிவித்துள்ளார்.

ஐ.யூ.எம்.எல். இளைஞரணி

இது தொடர்பாக கொச்சியில் நடைபெற்ற ஐ.யூ.எம்.எல். இளைஞரணி மாநாட்டில் பேசிய அவர், “நெதன்யாகுவின் தோல்விக்கு மலப்புரம், காசர்கோடு மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள ஐ.யூ.எம்.எல். இளைஞரணி உறுப்பினர்களுக்கும் பங்கு உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொண்ட பிரசாரங்களும், உலகம் முழுவதும் சாத்தியமான இடங்களில் எல்லாம் இஸ்ரேலுக்கு எதிராக நீங்கள் ஏற்பாடு செய்த போராட்டங்களும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிகழ்வை ஒரு பாடமாக பார்க்க வேண்டும். மேலும் இது பல நாடுகளில் வலதுசாரி சக்திகள் சந்தித்துவரும் பின்னடைவுகளின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்.

கேலி பதிவுகள்

இந்நிலையில், ஷாஜியின் பேச்சுக்கு இணையதள வாசிகள் கடும் விமர்சனங்களையும், கேலி பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். புதிய இஸ்ரேல் பிரதமர், முஸ்லிம் லீக் கட்சியை தனது அமைச்சரவையில் சேருமாறு அழைத்ததாக ஒருவர் கிண்டலாகக் பதிவிட்டுள்ளார். அதே போல், ஐ.யு.எம்.எல் மற்றும் இளைஞர் லீக்கிற்கு இஸ்ரேலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது என்று கூறி மற்றொருவர் கேலி செய்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, இணையவாசிகள் சிலர் ஷாஜியை ஆதரித்து, சமூக ஊடக பிரசாரங்கள் மற்றும் பதிவுகளின் வீரியம் குறித்து மட்டுமே கே.எம்.ஷாஜி பேசியுள்ளார் எனவும், அவர் கூறியதில் தவறு எதுவும் இல்லை என்றும் வாதிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X