

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம், தனக்கென்று மாநில விலங்கு, பறவை, பூ, மீன் போன்றவற்றை ஏற்கனவே அறிவித்து உள்ளது. இப்போது அந்த வரிசையில், தனக்கென்று ஒரு பழத்தை அறிவிக்கப்போகிறது. அந்தப் பழம் பலாப்பழம்.
இதுபற்றி கேரள விவசாய மந்திரி சுனில் குமார் கூறுகையில், 21ந் தேதி சட்டசபையில், கேரள மாநில பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட இருக்கிறது. இதன் நோக்கம், பலாப்பழத்தின் உற்பத்தியை பெருக்குவதுடன், அதன் துணைப்பொருட்கள் விற்பனையை மேம்படுத்துவதுதான் என்றார்.
இப்போது மாநில பழமாக அறிவிப்பதின் மூலம், பலாப்பழம் மற்றும் அதன் துணைப்பொருட்கள் விற்பனை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, எங்கள் மக்கள் பலாப்பழ உற்பத்திக்காக உரம் போடுவதில்லை. எல்லா கிராமங்களிலும் சிறப்பு கவனம் செலுத்தி, இயற்கையாக சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக பிற மாநிலங்களை விட இங்கு பலாப்பழம் இன்னும் கூடுதல் சுவையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.