

ஐதராபாத்,
இந்தியாவில் தற்போது ஆன்லைன் பந்தயங்கள், சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகள் பிரபலமாக விளையாடப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் நேரப்போக்கிற்காக இது போன்ற விளையாட்டில் பங்கேற்பவர்கள், பின்னர் பணம் கட்டி விளையாடத் துவங்குகின்றனர். சில நூறு ரூபாய்களில் ஆரம்பித்து, சில லட்ச ரூபாய்கள் வரை பணம் கட்டி விளையாடி வருகின்றனர்.
இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் சிலர் தங்களது சேமிப்பு பணத்தை எல்லாம் பந்தயமாக கட்டி விளையாடுகின்றனர். ஆனால் விளையாடும் அனைவருக்கும் அவர்களது பணம் திரும்ப கிடைத்துவிடுவதில்லை. இது போன்ற ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து சிலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் நடிக்கக் கூடாது என்றும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இது குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதியுள்ள்ளார்.
அந்த கடிதத்தில் அவர், ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய Internet Service Providers(ISP) எனப்படும் இணைய சேவை வழங்குனர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அந்த கடிதத்தில் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.