ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமனம்

பீகாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
Sanjay Kumar Jha
Published on

புதுடெல்லி,

ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் புதுடெல்லியில் இன்று (ஜூன் 29) நடைபெற்றது. பீகார் முதல்-மந்திரியும், கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், மூத்த தலைவர்கள் லாலன் சிங், அசோக் சவுத்ரி, தேவேஷ் சந்திர தாக்கூர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டார்.

சஞ்சய் ஜா தற்போது மாநிலங்களவை ஜக்கிய ஜனதா தள குழு தலைவராக உள்ளார். பா.ஜ.க. தலைமையுடன் நல்ல சமன்பாட்டை கொண்டிருப்பதால் சஞ்சய் ஜாவை செயல் தலைவராக நியமிக்கும் முடிவை அக்கட்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ஜா, "கட்சியின் செயல் தலைவராக நியமித்ததன் மூலம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் என்னிடம் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார். நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுடன் இணைந்து மேலும் ஒருங்கிணைப்புடன் செயல்பட முயல்வோம். நிதிஷ் குமார் பீகாரில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். கடந்த 19 ஆண்டுகளாக பீகாரின் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் இருக்கிறார். மாநிலம் அடைந்துள்ள அனைத்து நன்மைகளுக்கும் அவர்தான் காரணம்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் எங்கள் கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில் 177 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். 2025ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். 19 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதிலும் நிதிஷ் குமாருக்கு எதிராக மாநிலத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதை உணர்த்தி உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com