திடீரென வழிமறித்த பெண்: பிரதமரின் பாதுகாப்பில் கோட்டைவிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்

பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
திடீரென வழிமறித்த பெண்: பிரதமரின் பாதுகாப்பில் கோட்டைவிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்
Published on

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் அடையாளமாக கருதப்படும் பிர்சா முண்டாவின் பிறந்தநாள், பிர்சா முண்டா ஜெயந்தியாக கெண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

செவ்வாய்க்கிழமை இரவு ராஞ்சி வந்து சேர்ந்த பிரதமர், விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் வரை சுமார் 10 கிமீ தூரம் சாலைப் பேரணி நடத்தினார். நேற்று காலை அங்கிருந்து பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் மியூசியத்திற்கு சென்று, பிர்சா முண்டாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் குந்தி மாவட்டத்தில் உள்ள பிர்சா முண்டாவின் பிறந்த ஊரான உலிஹாட்டு கிராமத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்தார். பிறகு பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 15வது தவணையான 18,000 கோடி ரூபாயை விடுவித்தார். மேலும் அந்த மாநிலத்தில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் மியூசியத்திற்கு பிரதமர் சென்றபோது, ஒரு பெண் திடீரென ஓடி வந்து பிரதமரின் பாதுகாப்பு வாகனத்திற்கு முன் நின்று வழிமறித்தார். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்து, உடனடியாக அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி காவலில் வைத்தனர்.

இச்சம்பவம் பற்றிய விசாரணையில், இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் 2 கான்ஸ்டபிள்களின் கவனக் குறைவு தான் பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி ராஞ்சி எஸ்எஸ்பி சந்தன் குமார் சின்ஹா கூறியதாவது:-

அந்த பெண்ணை விசாரித்தபோது அவரின் பெயர் சங்கீதா ஜா என்பது தெரியவந்தது. அவர் ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள ஜமுனி கிராமத்தில் 2012 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்ததாகவும். ஆனால், அவர்களுக்கிடையே 2016 இல் தகராறு தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும் கணவரின் சம்பளத்தை தன்னுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று அந்தப் பெண் விரும்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கடந்த மாதம் அக்டோபரில் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து 10 நாட்கள் அங்கேயே தங்கி அவரை சந்திக்க முடியாமல் திரும்பியுள்ளார். பிறகு ஜனாதிபதியை சந்திக்க முயற்சி செய்துள்ளார். அவரையும் சந்திக்க இயலாத காரணத்தால் தியோகரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார்.

பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் வருவதாக அறிந்து இங்கு வந்திருக்கிறார்.

இவ்வாறு எஸ்எஸ்பி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com