

புதுடெல்லி
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது சொன்ன கருத்துகளின் பின்னணியில், அபிஜீத் திப்கே என்பவரால் இன்ஸ்டா பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'என்ற பக்கம் தொடங்கப்பட்டது. அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனை பின்தொடர தொடங்கினர்.
ஒரு கட்டத்தில், பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அது விஞ்சியது. இதனால், மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. எனினும், மீண்டும் அதே பெயரில் ஒரு புதுப்பக்கம் தொடங்கப்பட்டது. தவிர, அந்த பக்கமும் இணையத்தில் வேகம்பிடித்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி”, இந்திய கல்வி முறையின் தோல்விகளுக்கு எதிராக டெல்லியில் நடத்தவுள்ள போராட்டத்திற்கு முன்னதாக, தனது அமைப்பை விரிவுபடுத்த மூன்று புதிய செய்தி தொடர்பாளர்களை நியமித்தது.
இதன்படி, புலனாய்வு பத்திரிகையாளர் சவுரவ் தாஸ் தலைமை செய்தி தொடர்பாளராகவும், திரைப்பட இயக்குநர் விஜேதா தஹியா மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் செய்தி தொடர்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி பெறப்படவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்து இருந்தது. இதனால் பதற்றம் நிலவியது. தொடர்ந்து டெல்லி போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அபிஜீத் திப்கே அமெரிக்காவில் இருந்து இன்று காலை இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார். தீப்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். வினாத்தாள் கசிவு சம்பவங்களால், 5 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்றும் அப்போது கூறினார்.
முகப்பில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் உருவப்படம் கொண்ட புத்தகம் ஒன்றையும் கையில் ஏந்தி கோஷம் எழுப்பியபடி சென்றார். அவருடைய இந்த ஆர்ப்பாட்டத்தில் பருவநிலை தன்னார்வலர் சோனம் வாங்சுக்கும் கலந்து கொள்கிறார்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தி கொள்ள போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் பலரும் திரளாக கூடியுள்ளனர். கைகளில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஏந்தியுள்ளனர்.