கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: காங்கிரஸ் தலைமையிடம் பேச விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக டி.கே.சிவக்குமார் தகவல்

கர்நாடக மந்திரிசபையில் தற்போது 14 மந்திரிகள் மட்டுமே உள்ள நிலையில், 20 இடங்கள் காலியாக உள்ளன.
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: காங்கிரஸ் தலைமையிடம் பேச விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக டி.கே.சிவக்குமார் தகவல்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தின் முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் கடந்த ஜூன் 3-ந்தேதி பதவியேற்றார். அவருடன் 13 மந்திரிகளும் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா நடைபெற்ற தினமே டி.கே.சிவக்குமார் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றிருந்தது. அதன்பிறகு, ஜூன் 20-ந்தேதி நடைபெற்ற 2-வது மந்திரிசபை கூட்டத்தில், மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பொதுசேவை துறை தொடங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கர்நாடகாவில் மந்திரிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 34 ஆக உள்ள நிலையில், முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட தற்போது 14 மந்திரிகள் மட்டுமே உள்ளனர். மந்திரிசபையில் 20 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, மந்திரிசபை விரிவாக்கம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மூத்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் மந்திரிசபையில் இடம்பிடிக்க தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், “ஆகஸ்ட் 6-ந்தேதி சட்டமன்றத்தைக் கூட்ட உளளோம். அதுவே எங்களது முன்னுரிமை. மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக என் தரப்பில் எந்தத் தாமதமும் இல்லை. கட்சித் தலைமை எனக்கு எப்போது நேரம் ஒதுக்குகிறதோ, அப்போது நான் டெல்லி செல்வேன். இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் அவர்கள் எனக்கு ஒரு தேதியைத் தெரிவிப்பார்கள். அவர்கள் தேதி அறிவித்ததும், நான் சென்று கட்சி தலைமையிடம் பேசிவிட்டு திரும்பி வருவேன்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com