டெல்லி:மத்திய அரசை கண்டித்து கர்நாடகா முதல்-மந்திரி போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கர்நாடகா மாநிலத்திற்கு முறையான நிதி பங்கீடு வழங்க கோரி 'டெல்லி சலோ' போராட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லி:மத்திய அரசை கண்டித்து கர்நாடகா முதல்-மந்திரி போராட்டம்
Published on

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் அரசு குற்றம்சாட்டியது.

அதே கட்சியை சேர்ந்த டி.கே.சுரேஷ் எம்.பி., வரி வருவாயை பங்கிட்டு வழங்குவதில் தென்இந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் தென்இந்தியாவுக்கு தனி நாடு கோரும் நிலை ஏற்படும் என்றும் கூறினார். இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாடாளுமன்றத்திலும் அவரது கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்தது. அவரது கருத்தை பிரதமர் மோடியும் மறைமுகமாக சாடி பேசினார்.

இந்த நிலையில் வரி வருவாய் உரிய முறையில் முறையான நிதி பங்கீடு வழங்காத மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் அரசு சார்பில் டெல்லியில் 7-ந் தேதி போராட்டம் நடைபெறும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்திற்கு ரூ.1.87 லட்சம் கோடி வரி பங்கீடு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்த பா.ஜனதா தலைவர்கள், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டுகளில் வழங்கிய நிதியை விட தற்போது பல மடங்கு கூடுதல் நிதி கர்நாடகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினர்.

இந்த விஷயத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திட்டமிட்டப்படி மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு சமமான நிதிப்பங்கீட்டை வழங்கவில்லை என குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட மந்திரிகள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.,க்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நாடாளுமன்றக்கூட்டம் நடைபெற்றுவரும் சூழலில் டெல்லியில் கர்நாடக ஆளும் கட்சி போராட்டம் நடத்தி வருகின்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com