

ஐதராபாத்,
கர்நாடக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை மந்திரியாக இருந்து வருபவர் சி.சி.பட்டீல். இவர் நேற்று முன்தினம் இரவு பெலகாவியில் இருந்து பெங்களூருவுக்கு தனது காரில் புறப்பட்டார். அவரது காருக்கு முன்பும், பின்பும் போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் வந்தன. நேற்று அதிகாலையில் அவர்கள் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா குயிலாலு டோல் கேட் பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக, மந்திரி சி.சி.பட்டீலின் முன்னால் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த பாதுகாப்பு வாகனத்தில் இருந்த போலீசார் அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மந்திரி சி.சி.பட்டீலின் கார் மீது லாரி மோதாததால் அவரும் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து இரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.