கோவா: கடற்கரையில் சுற்றுலா பயணிக்கு நடந்த விபரீதம்...

கடற்கரை பாறையின் மீது அமர்ந்திருந்த மசாலி, ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
கோவா பகா கடற்கரை அலையில் அடித்துச் செல்லப்பட்ட மசாலி
Published on

பனாஜி,

கோவாவில் கடற்கரையில் அமர்ந்திருந்த சுற்றுலா பயணி ஒருவர், ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

சுற்றுலா

கர்நாடகாவின் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஹாஸ் அஷ்பக் மசாலி (வயது 33). இவர் நேற்று (புதன்கிழமை) கோவாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். மேலும் கோவா பகா கடற்கரை பாறையின் மீது ஏறி அமர்ந்து ஜாலியாக தனது செல்போனில் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.

கடல் அலையால் உயிரிழப்பு

அப்போது கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத அலையானது பாறையின் மீது அமர்ந்திருந்த மசாலியை கடலுக்குள் இழுத்துச் சென்றது. கடல் அலையில் சிக்கிய மசாலி கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்த கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக மீட்புக்குழு கடல் அலையில் சிக்கிய மசாலியை மீட்பதற்காக முயற்சி செய்தனர்.

கரை ஒதுங்கிய உடல்

ஆனால் கடலின் சீற்றம் பயங்கரமாக இருந்ததால் அவரை மீட்க முடியவில்லை. பின்னர், பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com