கேரளம்; அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேர் கைது

அமலாக்கத் துறை அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இதுவரை 8 பேரை மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.
 கேரளம்; அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேர் கைது
Published on

கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன். இவருடைய மகள் வீணா விஜயன். இவருக்கு சொந்தமான எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு கொச்சின் தாது மணல் ஆலை நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்.) ரூ.1.72 கோடி சட்டவிரோதமாக பணம் வழங்கியதாக 2016-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரத்தில் அப்போதைய முதல்-மந்திரி பினராயி விஜயன் மீதும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டின.

மேலும் எந்தவொரு பணியையும் மேற்கொள்ளாமல் வீணாவின் நிறுவனம், சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதுதொடர்பாக 2019-ம் ஆண்டு வருமானவரித்துறை விசாரணை நடத்தியது. இதில் சி.எம்.ஆர்.எல். நிறுவனம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணையை கையில் எடுத்தது.இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவனம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனால் விசாரணை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட்டு, விசாரணையை நடத்த தடையில்லை என அறிவித்தது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிரடியாக களத்தில் இறங்கியது. முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மருமகன் முகமது ரியாஸ் வீடுகள் உட்பட 12 இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காரின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இதுவரை 8 பேரை மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com