

புதுடெல்லி
கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து இன்று காலை காரில் புறப்பட்டு உள்ளார். அவர் விமானம் மூலம் கேரளா வருகை தருகிறார். கடந்த 25-ந்தேதி கேரளாவின் கோழிக்கோட்டில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அரசு நிர்வாகம், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விசயங்களை மையப்படுத்தி பேசினார்.
இந்த நிலையில், கேரளாவில் அவர் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார். இதில் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், புதிய வாக்காளர்களை கவரும் வகையிலும் பொது கூட்டங்களில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, முக்கிய தொகுதிகளை கைப்பற்றம் நோக்கில், சிறுபான்மை சமூகத்தினரை கவரும் வகையில் கூட்டணியின் உத்தரவாதத்திற்கான வாக்குறுதிகளை பற்றி இன்று பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 28-ந்தேதி, கட்சியின் கண்ணூர் தொகுதி எம்.பி. சுதாகரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது கட்சியின் தலைவர் கார்கே மற்றும் பொது செயலாளர் வேணுகோபால் ஆகியோரும் உடனிருந்தனர்.
கேரள சட்டசபைக்கான பதவிக்காலம் மே 23-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், 140 இடங்களை கொண்ட கேரள சட்டசபைக்கான தேர்தல் பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ந்தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, கேரளாவில் ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளுடன் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன.