கேரளாவின் புதிய முதல்-மந்திரி யார்..? இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு?

பிரியங்கா காந்தியும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
கேரளாவின் புதிய முதல்-மந்திரி யார்..? இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு?
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயலும் நிலையில், முதல்-மந்திரி யார்? என்பதில் கடும் இழுபறி நிலவி வருகிறது.

முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் எம்.பி., கடந்த பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி. சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தொண்டர்கள் தனித்தனியே பேரணி நடத்தினர்.

இதற்கிடையே முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடக்குழுவைச் சேர்ந்த 2 பேர் கடந்த வாரம் திருவனத்தபுரத்திற்கு வந்து ஆலோசனை நடத்தினர். ஆனால் இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் மேலிடக்குழு ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பியது.

தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வேணுகோபால் எம்.பி. உள்பட 3 பேரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. அவர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இவர்கள் 3 பேருமே தங்களுக்குத் தான் முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று முரண்டு பிடித்தனர். இதனால் இந்த பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கருத்து கேட்க கேரளத்தின் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களை கட்சி மேலிடம் டெல்லிக்கு அழைத்தது. அதன்படி சுதாகரன், முரளிதரன், சுதீரன், எம்.எம்.அசன், முல்லப் பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் டெல்லிக்கு விரைந்தனர். மேலும் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியிடமும் கருத்து கேட்கப்பட்டது. தற்போது பிரியங்கா காந்தியும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

இந்தநிலையில் நேற்று மாலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், 'கேரளத்தின் புதிய முதல்-மந்திரி யார்? என்பது குறித்து நாளை (அதாவது இன்று) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்' என கூறினார். இதனிடையே வி.டி. சதீசனின் ஆலுவா மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வீடுகளில் தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com