கேரள குண்டு வெடிப்பு : கேமராவில் பதிவான நீல நிற கார்... புதிய தகவலை வெளியிட்ட போலீசார்..!

கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டு வெடிப்பு தொடர்பாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள குண்டு வெடிப்பு : கேமராவில் பதிவான நீல நிற கார்... புதிய தகவலை வெளியிட்ட போலீசார்..!
Published on

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்துள்ள களமச்சேரியில் இன்று பிரார்த்தனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் 2,000 பேர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது திடீரென வெடிச் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து பிரார்த்தனை கூட்டத்தில் பல இடங்களில் தீ பற்றியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். அவர்களுக்கு முதலில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

இந்த மோசமான சம்பவத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தநிலையில், கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டு வெடிப்பு தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் நீல நிற கார் புறப்பட்டு சென்றதை போலீசார் கண்டறிந்துள்ளனர். சிசிடிவி கேமராவில் பதிவான நீல நிற காரை எர்ணாகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, 8 பேர் கொண்ட தேசிய பாதுகாப்பு படையினர் இன்று மாலை கேரளா சென்றடைந்து விசாரணையை தொடங்குவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

குண்டுவெடிப்பு தொடர்பாக பிரிவினையை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹேப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com