

திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் குடிபோதையில் இருந்த இலங்கை வாலிபர் ஒருவர், பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் குதித்து மூச்சுவிட முடியாமல் தத்தளித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள குழந்தைகள் விளையாடும் பூங்கா ஒன்றின் அருகே ஆற்றுப்பால நடைபாதை அமைந்துள்ளது. அங்கு வந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், கடுமையான மது போதையில் இருந்தார். திடீரென அவர் எதிர்பாராத விதமாக பாலத்தின் மீது இருந்து ஆற்றில் குதித்தார்.
அந்த சமயம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வேகம் தாங்காமல் அந்த வாலிபர் தண்ணீருக்குள் மூழ்கி எழ ஆரம்பித்தார். சுமார் 100 மீட்டர் தூரம் வரை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட அவர், மூச்சு விட முடியாமல் தண்ணீருக்குள் கைகளை அசைத்து உயிருக்காக தத்தளித்தார். இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் அந்த வழியாக ஒரு ஸ்பீட் போட் சென்றது. அதில் இருந்தவர்கள் ஆற்றில் வாலிபர் உயிருக்கு போராடுவதைக் கண்டு, உடனடியாக விரைந்து சென்று அவரை சாமர்த்தியமாக மீட்டனர். இதனால் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
தகவலறிந்து வந்த கேரள போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் கடுமையான மது போதையில் இருந்ததே இந்த விபரீத செயலுக்கு காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாலிபருக்கு தேவையான அறிவுரைகளை வழங்கிய போலீசார், அவரை பத்திரமாக அவருடைய உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.